முக்கிய செய்திகள் விளையாட்டு

“இப்போது மட்டுமல்ல எப்போதுமே நீங்கள் தான் என் கேப்டன்” : தோனி ஓய்வு குறித்து கோலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று இரவு 19:29 மணியளவில் தனது ஓய்வை அறிவித்தார். கடந்த ஓராண்டாக ரசிகர்களிடம் மிகப்பெரிய கேள்வியாக இருந்த அவரது ஓய்வு குறித்து நேற்று மனம் திறந்து தோனி அறிவிக்க ரசிகர்களுக்கு அது பெரும் வேதனையாக அமைந்தது

அவரின் இந்த ஓய்வு முடிவை அடுத்து கிரிக்கெட் வீரர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் வாதிகள் என பலதரப்பட்ட தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது தோனியின் இந்த ஓய்வு குறித்து இந்திய அணி கேப்டன் கோலி பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலமாக தோனிக்கு நன்றி சொல்லி பிரியா விடை கொடுத்துள்ளார்.

அந்த வீடியோ பதிவில் கோலி கூறியதாவது : வாழ்க்கையில் சில தருணங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. மேலும் வார்த்தைகளே வராமல் ஸ்தம்பித்து நிற்கும் ஒரு தருணம் வரும் அப்படி ஒரு தருணமாக இதை நான் பார்க்கிறேன். உங்களுக்கும் எனக்கும் இடையே சிறந்த நட்பும், புரிதலும் இருந்தது.

நீங்கள் எப்போதுமே அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளோடு இறுதிவரை விளையாடுவீர்கள். என் கிரிக்கெட் வாழ்க்கையை உங்களது தலைமையின் கீழ்தான் ஆரம்பித்தது அதில் எனக்குப் பெருமகிழ்ச்சி நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கு என்றுமே நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

“இப்போது மட்டுமல்ல எப்போதுமே நீங்கள் தான் என் கேப்டன்”. உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என்று உருக்கமாக விராத் கோலி அந்த பதிவை இட்டுள்ளார். இந்த பதிவினை கண்ட ரசிகர்களின் மனதை கோலியை பாராட்டியும் தோனி மீது அவர் வைத்திருக்கும் அன்பு குறித்தும் பாராட்டி இந்த பதிவை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisements