ரெய்னா விவகாரம் என்னதான் நடக்கின்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்

கொரோனா காரணமாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்த முடியாத சூழலில் அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டு ஐபிஎல் அணி வீரர்கள் அமீரகம் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரரான சுரேஷ் ரெய்னா திடீரென போட்டிகளில் இருந்து விலகி இந்தியா திரும்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் துபாய் செல்வதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னையில் ஒரு வாரம் தங்கி பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சி தேவை இல்லாத ஒன்று என்றும் இதனால் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சுரேஷ் ரெய்னா சுட்டிக்காட்டி இருந்தார்.

ஆனால் தோனி சென்னையில் பயிற்சி என்பதில் பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு பந்து வீச்சாளர் உட்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தான் முன்பே கூறியபடி விளைவுகள் நடந்துவிட்டதாக தோனியிடம் கூறி வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது

இந்த வாக்கு வாதம் காரணமாகவே அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. தோனி ஓய்வு அறிவித்த அதே நாளில் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு அறிவித்து தங்கள் நட்பை நிரூபித்த நிலையில் தற்போது ஒரு சில நாட்களில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பில் தற்போது BCCI முன்னாள் தலைவர் சீனிவாசன் ரெய்னா குறித்து பேசியுள்ள கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“சிலருக்கு வெற்றி போதை தலைக்கேறி விட்டால் இப்படி நடக்கும். ஐபிஎல் இன்னும் தொடங்கவில்லை. விரைவில் 11 கோடி வருமானத்தை இழந்ததற்காக ரெய்னா வருந்துவார். விளையாடியே ஆக வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. விருப்பம் இல்லையென்றால் வெளியேறி போய் விடலாம். தோனி அவ்வப்போது வீரர்களின் உடல்நிலை பற்றி கேட்டறிகிறார். எந்த சூழலையும் சமாளிக்க தயாராய் உள்ளார்” என கூறியுள்ளார்.

சீனிவாசனின் இந்த கருத்தால் சுரேஷ் ரெய்னாவுக்கு அணியின் நிர்வாக தலைமையுடன் மோதல் எழுந்திருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளன.

இதையும் படியுங்கள்!