விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறித்து ஜனாதிபதி கருத்து

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு உயிர் வாழும்வரை வழங்கப்படுகின்ற வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்கள் உயிரிழந்த பின்னர் அவர்களை தங்கி வாழ்வோருக்கும் உயிர் வாழும்வரை வழங்குவதற்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று கூடியது.

தற்போதைய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நடைபெறும் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் இதுவாகும்.

குழுவின் தலைமைப் பதவி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு உரித்துடையது என்ற வகையில் ஜனாதிபதி இதில் பங்குபற்றியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்டல், இராணுவ வீரர்களின் வேதனம் போதைப்பொருள் ஒழிப்பு, பாதுகாப்பு அமைச்சுக்குரிய நிறுவனங்களின் வருடாந்த அறிக்கை போன்ற பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

சட்டம், அமைதியை நிலைநாட்டி மேம்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள செயற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி நாட்டின் பல்வேறு பிரதேசங்களின் தேவைக்கேற்ப 196 காவல் நிலையங்களை புதிதாக ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் காவல்துறை சேவையில் மனித வலுவை அதிகரிப்பதற்காக ஆண், பெண் இருபாலாரில் இருந்தும் 10 ஆயிரம் பேரை புதிதாக இணைத்துக்கொள்ளவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அத்துடன் விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு உயிர் வாழும்வரை வழங்கப்படுகின்ற வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்கள் உயிரிழந்த பின்னர் அவர்களிடம் தங்கி வாழ்வோருக்கும் உயிர் வாழும்வரை வழங்குவதற்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை தற்போது அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ வீரர்களின் குடும்பங்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாகக் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அவசியமில்லை என்றும் போராட்டங்களின் பின்னால் இருப்பது வேறு நோக்கங்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, போதைப்பொருள் ஒழிப்புக்காக புதிய தேசிய கொள்கை தற்போது தயாரித்து நிறைவு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அது விரைவில் வெளியிடப்படும்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும் போது மத உபதேசங்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மத அடிப்படைவாத சிந்தனைகளைக்கொண்ட புத்தகங்களை தடை செய்வது தொடர்பாக எழுந்த கருத்துக்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி இந்த தீர்மானம் குறித்த ஒரு மதத்தை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டவை அல்ல என்றும் பொதுவாக அனைத்து வகையான மத அடிப்படைவாதத்தையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு பிரிவினருக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளில் தென்னை அல்லது வேறு பொருத்தமான பயிரினங்களை பயிரிடுவதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

அதற்காக பயன்படுத்தக்கூடிய காணிகளை இனங்காணுமாறும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதையும் படியுங்கள்!